Thursday, December 4, 2008
நட்பு என்று சொல்லிக்கொண்டு....
வாழ்க்கைப்பாதையில்
அனைத்தையும் தொலைத்ததாய்
நினைத்துத்தனித்திருந்த வேளையில்
நீயாகவே வந்தாய்..
நட்பு என்னும் பெயரோடு..
நான் சாய்ந்து கொள்ளத்
தோள் தேடுகையில்
உன் மடியினையே தந்தாய்-இன்று
பல வேஷமிட்டு பொய் பரப்பிச்
செல்கிறாய்...
உன் வார்த்தைகளில் தேன் தடவி
மெல்லக் கொல்லும் விஷ
ஜாலத்தை எங்கு கற்றாய்?
சிரித்துச் செல்லுகிறாய் நித்தம்
பல்லிடுக்கில் வழிகிறது பொறாமை
உன் கண்கள்
சில நேரங்களில் காந்தமாயும்
பல நேரங்களில் படுகுழியாயும் மாற
சித்தம் கலங்கி
விழுந்து எழும்புகின்றேன்-ஆனாலும்
நன்றி தான் சொல்வேன் உனக்கு
பல பாடங்களைக் கற்று கொடுப்பதும் நீதான்!
நின்று நிதானித்து
மனிதனின் விகாரங்களைத் தவிர்த்து
முகமூடி வேஷங்கள் களைந்து
இந்த உலகின் நிஜத்தை அறிய
தெரிந்துவிட்டேன்
உன்னுடன் பழகிய நாளிலிருந்து...
உன்னை நேசித்து விட்டேன்
என் நட்பால்
உன் சுயம் அறியாமல்...
பிரிந்து செல்லும் வழி தெரியவில்லை
வெறுத்துத் தூக்கி எறியவும்
நீயே
கற்றுக் கொடுத்து சென்றுவிடு !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment