Saturday, December 6, 2008

கடைசியாகச் சொல்லிச் செல் !


நானாகவா வந்தேன்
இல்லையே!
நீயாகத் தானே வந்தாய்.

வந்தாய்
அன்பாய் கதைத்தாய்...
பாசமாய் பழகினாய்...

நட்பாய்
நாள் தோறும் நாவினிக்கப் பேசினாய்...

அன்புக்கு
ஆயிரம் அர்த்தங்கள் சொன்னாய்...

பாசத்துக்கு
பல்லாயிரம் கதைகள் சொன்னாய்...

உறவுக்கு
ஓராயிரம் உதாரணங்கள் சொன்னாய்...

தனிமையின் சோகம்
தலை சாய்த்துக் கொண்டேன்.
காதோரம் ஒலித்த
கனிவான வார்த்தைகள் எல்லாம்
இன்னும் என் மனதில்
அடி மனதை நிறைத்து
ஞாபகத் தூறலாய்...

ஓ.....!
இறுதியில் நீயும் கூட
சராசரி மனிதனைப் போலவே
சத்தங்கள் எதுவுமின்றி
சாதாரணமாய் மறைந்து விட்டாய்.

பாசத்துக்கு ஏங்கிய மனசு
பாதி உயிர் போவதாய்
பாரம் சுமந்து தவிக்கிறது.

வலிகளை என்னால்
வார்த்தைகளால்
வடிக்க முடியவில்லை.

ம்.....
பட்டாம் பூச்சியாய்
தொடுவானம் தொடுவதற்காய்
விரித்த சிறகுகளை எல்லாம்
திரும்ப இழுத்து
கூட்டுக்குள் அடைத்து
தாழ் போட்டுக் கொள்கின்றேன்.

ஆனாலும்...
இறுதியாக
உன்னிடம் ஒரே ஒரு வேண்டுகோள்...

நேசத்தின் முகத்தில்
நிறமாற்றம் வந்தது ஏன்?

விடை தெரியாமல்
மூச்சுத் திணறுகின்றேன்...

தொடர்ந்தும்
நிசப்த அலைவரிசைகளில்
மௌனங்களால் மட்டும்
எனக்கு
தீர்ப்புச் சொல்லிச் செல்லாதே
தாங்காது என் இதயம்.

ம்....
மறைக்காமல்
காரணத்தை மட்டும்
கடைசியாகச் சொல்லிச் செல்.
அன்புடன் "Friend"

No comments: