
வருடக்கணக்காய் பேசிய பேச்சுகளை
எல்லாம் கூடவே அழைத்து வருகிறது
என்றேனும் வரும்
ஒற்றை குறுந்தகவல்

பல இதயங்களின் கவிதைகளை
சுமந்திருக்கும் கவிதைப் புத்தகம்
வகுப்பறை மேசை

வேவ்வேறு திசைகளில் இதழ்களாய் விரிந்தாலும்
இணைந்தே இருக்கின்றோம்
"நட்பு" என்னும் ஒற்றைக் காம்பில்

இன்னும் உலராமலேயே இருக்கிறது
கடைசியாய் நீ
உயிர்தொட்டு எழுதிய
நினைவேடு

கல்லூரி கடைசி நாள்
பறவைகளின் கூட்டில்
சலசலப்பு

இப்பொழுதும் கல்லூரிப் பேருந்தைப்
பார்க்கும் போதெல்லாம்
தேடத் தொடங்கிவிடுகின்றன
தோள்கள் தலை சாய்த்து
உறங்கிய தோழியை!!!

பெற்றோர் இட்ட பெயரும்
அந்நியமாய்த் தெரிகிறது
தோழிகள் சூட்டிய
செல்லப் பெயரில்!!!